காசிகாண்டத்தில் சுக்கிரன் |
அசுரகுரு அருள் பொழிவாரா?
ஒருவர் ஜாதகப்படி, சுக்கிரதசைக்கு உட்படும் காலத்தில் அவர் வாழ்க்கையில் வளங்கள் அனைத்தையும் பெறுகிறார். மாளிகை, வாகனம், விளைநிலம், பதவி, புகழ் போன்ற பல்வேறு செழிப்புகளை எய்துகிறார். சுக்கிரதசை ஒவ்வொருவருக்கும் இருபது ஆண்டுகள் நீடிக்கிறது.
சுக்கிரனை அசுரகுரு என்று கூறுகின்றனர். அசுரர்களை, தேவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, போர்களை நிகழச் செய்கிறார். அப்படிப்பட்ட அசுரகுரு எப்படி ஒருவருக்கு, ‘சுக்கிரதசை’ என்ற வளமான வாய்ப்புகளைக் கொடுக்க இயலும் என்ற ஐயம் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
தன்னை நாடி வருபவருக்கு வேண்டிய சட்ட ஆலோசனைகளை வழங்கி வாதாடும் குற்றவியல் வழக்கறிஞர் வழிகாட்டியே ஆவார். குற்றவாளிகளுக்காக வாதாடும் வழக்கறிஞர் குற்றவாளியல்லர். அதுபோல், அசுரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கும் சுக்கிராசாரியார் கொடியவர் அல்லர். குற்றவியல் வழக்கறிஞர்களில் பலர் பெரும்பொருள் ஈட்டி, பல்வேறு அறப்பணிகளைச் செய்கின்றனர். அதுபோல்தான், சுக்கிராசாரியரும் சுக்கிரதசை என்ற வளமான நிலையைக் கொடுத்தருளுகிறார்.
காசிகாண்டத்தில் சுக்கிரன்
பிருகு முனிவரின் மகனாகப் பிறந்தவர் சுக்கிரன். அதனால் அவரை, ‘பார்க்கவன்’ என்று அழைத்தனர். பார்க்கவன் குபேரனிடம் பகைமை பாராட்டினார். அதனால், குபேரன் மனம் வருந்தி ஈசனிடம் முறையிட்டான். ஈசன் பார்க்கவனின் செருக்கை அழித்தான். அதன்பிறகு, பார்க்கவன் வெண்மையும் ஒளியும் பெற்றார். அக்காரணத்தால் பார்க்கவன் என்ற பெயர் மறைந்தது. ஒளிபொருந்தியவர் என்ற பொருளில் சுக்கிரன் என்று அழைக்கப்பட்டார். காசிகாண்டம் என்ற நூல் இத்தகவல்களைத் தருகிறது.
காலன் அளித்த பதவி
பல்வேறு இடங்களில் பல்வேறு பிறவிகளை எடுத்த சுக்கிரன், கங்கை நதிக்கரையில் ஒரு வேதியராகப் பிறந்தார். அப்போது பிருகு முனிவரும், காலனும் சுக்கிரனைக் கண்டனர். பிருகு முனிவர் அவருக்கு ஞானத்தை அருளினார். காலன் சுக்கிரனை அசுரர்களின் குருவாக இருக்கப் பணித்தான். அதுமுதல் இவர் அசுரர்களின் குருவாக விளங்குகிறார். ‘ஆசார்யர்’ என்றால் குரு அல்லது ஆசான் என்று பொருள். சுக்கிரனாகிய ஆசான் என்ற பொருளில் இவரை, ‘சுக்கிராசாரியர்’ என்றனர். இவருடைய பெயரை, ‘சுக்கிராசாரியார்’ என்று எழுதுவது பிழையாகும். சுக்கிராசாரியர் என்றே எழுத வேண்டும். கம்பராமாயண உரையாசிரியர் திரு வை.மு.கோ. அவர்கள் தன் பெயரை, ‘கோபாலகிருஷ்ணமாசாரியர்’ என்று குறிப்பிடுவதிலிருந்தே இதனை அறியலாம்.
தீயசக்திகளை மறைமுகமாக அழிப்பவர்
மகாபாரதப் போரில் சகுனி மறைமுகமாகக் கண்ணனுக்கு உதவினார். ஆதலால் மகாபாரதப் பாத்திரங்களில் கண்ணனுக்கு மிகவும் பிடித்தவர் சகுனியே என்று கூறுவர். அவ்வாறே, சுக்கிராசாரியர் அசுரர்களை, தேவர்களுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அசுரர்களின் அழிவுக்கு வித்திடுபவர். அவ்வகையில் காலன் தனக்குக் கொடுத்த பொறுப்பைத் தவறாமல் நிறைவேற்றுகிறார் சுக்கிராசாரியர்.
எங்காவது ஓர் அசுரன் தோன்றியிருப்பதாக அறிந்தால், உடனே அவனிடம் தானாகவே செல்வார் சுக்கிரன். அசுரர்களைக் கல்வி கற்கவும், கடுந்தவங்கள் புரியவும், வல்லரசுகளை நிறுவிடவும் அவர் ஆலோசனைகள் வழங்குவார். அதன் பயனாக, அசுரர்கள் வரங்கள் பெற்று, நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். சில அசுரர்களுடைய நோக்கம் உயர்ந்ததாக இருக்கும். ஆனால், அதனை அடைய மேற்கொள்ளும் வழிமுறைகள் தவறானதாக அமைந்துவிடும். எனினும், அவர்கள் இறுதியில் தங்கள் இலட்சியத்தை அடைந்துவிடுவார்கள்.
சூரன் பெற்ற பெருவாழ்வு
சூரன், பதுமன் என்ற இருவரும் முறையே முருகப்பெருமானின் மயிலாகவும், சேவலாகவும் உயர்ந்திட விரும்பினார்கள். எனினும், அவர்கள் தங்கள் வழியில் மாறுபட்டார்கள். “மாறுபடு சூரர்” என்று அருணகிரிநாதர் குறிப்பிட்டார். “மாறிட்ட சூரன்” என்றார் சுவாமிமலை நவரத்தின மாலையின் ஆசிரியர்.
மாயை என்ற அசுரப் பெண்ணிடம் மயங்கிய காசிப முனிவர் சூரன் முதலான அசுரர்களைப் பெற்றார். காசிபர் அவர்களைப் பிரிந்து சென்றவுடன் சுக்கிராசாரியர் சூரனையும், அவனுடைய தம்பிகளையும் தவங்கள் செய்து, வரங்கள் பெற்றுவர, வழிகாட்டினார். சூரன் ஆயிரத்தெட்டு அண்டங்களை நூற்றெட்டு யுகங்கள் ஆட்சி செய்யும் வல்லமை பெற்றான். இறுதியில், சூரன் இரண்டு கூறாகி,முருகனின் ஊர்தியாகிய மயிலாகவும், கொடியாகிய சேவலாகவும் விளங்கும் கிடைத்தற்கரிய பெருவாழ்வைப் பெற்றான். அதற்கு மூலகாரணமாக இருந்தவர் சுக்கிராசாரியரே ஆவார்.
அம்பிகையின் மூக்குத்தி!
ஒன்பது கோள்களில் ஒன்றாகிய சுக்கிரனை அசுரகுரு என்று இந்தியர்கள் கூறுகின்றனர். மேல்நாட்டினர், ‘வீனஸ்’ என்ற கிரேக்க நாட்டு அழகு தேவதையின் பெயரால் அழைக்கின்றனர்.
ஆதிபராசக்தியாகிய அம்பிகையின் பேருருவில் இரண்டு கோள்கள் மூக்குத்தியாக விளங்குகின்றன. சிவப்புக்கல் மூக்குத்தியாகத் திகழ்வது செவ்வாய் என்றும், வெள்ளைக்கல் (வைரம்) மூக்குத்தியாக மின்னுவது சுக்கிரன் என்றும் கூறுகின்றனர். சுக்கிரனுக்கு உரிய வெள்ளிக்கிழமை அம்பிகை வழிபாட்டிற்கும் உகந்த நாளாகிறது. விடிவெள்ளியைத் தரிசிப்பவர்கள் கூர்மையான (தீட்சண்யமான) கண்பார்வையை அடைவர் என்றும் கூறுவர்.
எதிரணிக் காதல்!
தீராத பகையாளிகளான குடும்பங்களைச் சேர்ந்த சந்ததியினரிடையே காதல் அரும்புவது இயற்கை. ரோமியோ-ஜுலியட் நாடகம் முதல் தற்கால சின்னத்திரை நாடகங்கள் வரை அத்தகைய காதல் இடம் பெற்றுள்ளது. புராணங்கள் மட்டும் அதற்கு விதிவிலக்காகுமா?
சுக்கிராசாரியர் இறந்தவர்களை உயிர்ப்பிக்கச் செய்யும் மிருதசஞ்சீவினி மந்திரத்தை அறிந்தவர். தேவகுருவான வியாழனுக்கு (பிருஹஸ்பதிக்கு) அந்த மந்திரம் தெரியாது. வியாழ பகவானின் மகன் கசன் என்பவன் அம்மந்திரத்தைச் சுக்கிரனிடமிருந்து கற்றுவரத் தீர்மானித்தான். அவர் அறியாதவாறு அவருடைய மாணவனாகச் சென்று சேர்ந்தான்.
தேவகுருவின் மகன் கசனை அசுரகுருவின் மகள் தேவயானி காதலிக்கத் தொடங்கினாள். அந்த நிலையில் சுக்கிராசாரியரின் மாணவர்கள், கசன் தேவகுருவின் மகன் என்பதை அறிந்து கொண்டனர். அவர்கள் கசனை எரித்துச் சாம்பலாக்கினர். அச்சாம்பலை மதுவில் கலந்து, தங்கள் ஆசான் சுக்கிரனுக்குக் கொடுத்துவிட்டனர்.
தேவயானி அதனை அறிந்து துடித்தாள். தன் காதலனை உயிர்ப்பித்துத் தருமாறு சுக்கிரனிடம் வேண்டினாள். சுக்கிரனால் தன் அன்பு மகளின் வேண்டுகோளை மறுக்க இயலவில்லை. மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கூறி, கசனை உயிர்ப்பித்தால், அவன் சுக்கிரனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்பொழுது, சுக்கிரன் இறந்துவிடுவார். என்ன செய்வது?
“நான் கசனுக்கு மிருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசிக்கிறேன்; அவன் உயிர்பெற்று வெளியே வருவான்; நீ அவனைக் கொண்டு என்னை உயிர்ப்பிக்கச் செய்ய வேண்டும்; இந்த உறுதியை அளித்தால் உன் காதலனை உயிர்ப்பிக்கிறேன்.” என்று சுக்கிராசாரியர் தேவயானியிடம் கூறினார். தேவயானி அவ்வாறே செய்வதாக உறுதியளித்தாள்.
அவ்வாறே அனைத்தும் நடந்தன. கசன் உயிர் பெற்றான். மிருதசஞ்சீவினி மந்திரத்தையும் கற்றான். மதுவை அருந்தியதால் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி சுக்கிராசாரியர் மிகவும் வருந்தினார். அன்று முதல் ஆசான்களாக வழிகாட்டும் சான்றோர்கள் மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற விதியை ஏற்படுத்தினார். ஆசான்களே மதுவிற்கு அடிமையானால், அவர்களால் எப்படி தங்கள் மாணவர்களுக்கு வழிகாட்ட இயலும்? நம்மைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு புராண வரலாறு ஆகும்.
கசன்-தேவயானி காதல் நிறைவேறவில்லை. ஆசானை ஏமாற்றி, கசன் மிருதசஞ்சீவினி மந்திரத்தைக் கற்றான் அல்லவா? ஆகவே, தேவயானி, “நீ கற்ற மந்திரம் உனக்குப் பலிக்காமல் போகட்டும்” என்று கசனுக்குச் சாபம் கொடுத்துவிட்டாள். தேவகுருவின் மகனுக்கும் மிருதசஞ்சீவினி மந்திரம் எட்டாத கனவாகவே போய்விட்டது.
தானத்தைத் தடுத்தவர்
மாவலி மன்னனின் யாகசாலைக்கு வந்த வாமனர் மூவடி மண் கேட்டார். மாவலியின் குலகுருவான சுக்கிராசாரியர் வந்தவர் திருமாலே என்பதை அறிந்தார். மகாபலி ஏமாற்றம் அடைவதைத் தவிர்க்க முயன்றார் சுக்கிரன். திருமாலே தன்னிடம் தானம் கேட்டால், அது தனக்குப் பெருமையே என்று கூறிய மாவலி தாரை வார்த்துத் தானம் செய்ய முற்பட்டார்.
தானத்தைத் தடுத்துவிடும் நோக்கத்துடன் சுக்கிரன் வண்டின் உருவத்தை எடுத்துக் கொண்டு, கெண்டியின் வாயை அடைத்தார். அதனை அறிந்த திருமால் (வாமனர்) அடைப்பை நீக்க, தருப்பைப் புல்லால் கெண்டியின் வாயில் குத்தினார். அவ்வாறு குத்தியதால், வண்டின் உருவத்தில் இருந்த சுக்கிரனின் கண்பார்வை மறைந்தது. வருத்ததுடன் கீழே விழுந்தார்.
அப்போது சுக்கிரன் இழந்த கண்ணொளி மீண்டும் அவருக்குக் கிடைத்ததா? மயிலை, வெள்ளீசுவரர் தலவரலாறு இதற்குப் பதிலளிக்கிறது.
கண்ணொளி வழங்கிய வெள்ளீசன்
தான் இழந்த கண்பார்வையை மீண்டும் பெற்றிட, சுக்கிராசாரியர் தொண்டை நாட்டுத் திருத்தலமாகிய மயிலாப்பூருக்கு வந்தார். குருந்த மரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவினார். சிவபூஜைகள் செய்தார். சிவபெருமானை நோக்கிக் கடுந்தவம் இயற்றினார். வைகாசி மாதத்தில் வளர்பிறை பிரதோஷ நாளில் சிவபெருமான் சுக்கிராசாரியருக்குக் காட்சி கொடுத்தார். கண்ணொளியையும் கொடுத்தருளினார்.
சுக்கிரன் சிவபூஜைக் காட்சி
மயிலை அருள்மிகு வெள்ளீசுவரர் திருக்கோவில் வைகாசிப் பெருவிழா முதல்நாள் இரவு, சுக்கிரன் குருந்த மரத்தின் அடியில் சிவபூஜை செய்யும் காட்சியை நினைவுபடுத்தும் குருந்த மர வாகனத்தில் ஈசன் உலா வருவதைக் காணலாம். மேலும், விழாவின் எட்டாம் நாள் அதாவது, பிரதோஷ நாளில் வெள்ளீசுவரர் பிரமன் மற்றும் திருமாலுடன் மும்மூர்த்திகளாக எழுந்தருளி, சுக்கிரனுக்குக் கண்ணொளி வழங்கும் அரிய காட்சியை தரிசிக்கலாம்.
அசுரகுரு என்று அழைக்கப்பட்டாலும், சுக்கிராசாரியர் மக்களுக்கு வளமான வாழ்க்கையையும், கூர்மையான கண்ணொளியையும் அருள வல்லவர் ஆவார். சுக்கிராசாரியர் தனக்கேற்படும் அவப்பெயரையும், இடையூறுகளையும் பொருட்படுத்தாமல் தன் கடமையை நிறைவேற்றும் குருநாதராகத் திகழ்கிறார்.
|