| ராகு தசையில் கேது புக்தி நடக்கிறது. மாங்கல்ய தோஷமும் உள்ளது. என்ன பரிகாரம் செய்யலாம்? |
| ராகு தசையில் கேது புக்தி நடக்கிறது. மாங்கல்ய தோஷமும் உள்ளது. என்ன பரிகாரம் செய்யலாம்?
இந்த வாசகர் மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அவருக்கு தற்போது ராகு தசையில், கேது புக்தி நடக்கிறது. பொதுவாக ராகுவும், கேதுவும் எதிரும், புதிருமானவர்கள். ஒன்று கொடுத்தால் மற்றொன்று கெடுக்கும்.
எனவே, ராகு தசையில் கேது புக்தி நடக்கும் போது சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மனது நொறுங்கிப் போகும் சம்பவங்கள், நெருங்கியவர்களின் மரணம் கூட ஏற்படக் கூடும். மனச்சிதைவு ஏற்படலாம்.
ராகு தசையில் கேது புக்தி நடக்கும் போது நீண்ட காலத் திட்டங்கள் எதுவும் போடக் கூடாது. அன்றாடம் தேவையான விடயங்களை மட்டுமே மேற்கொள்ள வேண்டும். கேது ஞானக்காரகன் என்பதால், சித்தர் பீடங்களில் வழிபாடு மேற்கொள்வது நல்ல பரிகாரமாக அமையும். குலதெய்வத்தை வழிபட்ட பின்னர் சித்தர் பீடங்களுக்கு செல்ல வேண்டும்.
ராகு தசையில் கேது புக்தி முடிந்து, சுக்கிர புக்தி துவங்கும் போது திருமணத்திற்கு முயற்சி மேற்கொள்வது இவருக்கு பலனளிக்கும். ஏனென்றால், ராகு தசையில் கேது புக்தி நடக்கும் போது உள்ளுக்குள் குறைபாடு உள்ளவரை (உள் ஊனம்) மணக்கும் நிலை ஏற்படும்.
சில பெண்கள் வெளித்தோற்றத்தில் அழகாக, அறிவாக காட்சியளித்தாலும், அவர்களின் உள்உறுப்புகளான கருப்பை உள்ளிட்டவை சரியாக வளர்ச்சி பெறாமல் இருக்கும். எனவே, கேது புக்தி நடக்கும் போது திருமணம் செய்யக் கூடாது.
பரணி நட்சத்திரத்தில் பிறந்த இவருக்கு சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய தசைகள் முடிந்து தற்போது ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது. இவரது மாங்கல்ய தோஷம் கடுமையாக இருக்கும்பட்சத்தில், ஏற்கனவே மணம் முடித்து குறுகிய காலத்தில் மணவிலக்கு பெற்ற அல்லது விதவையான பெண்ணை திருமணம் செய்வது பலனளிக்கும்.
பழைய நூல்களில் மாங்கல்ய/சர்ப்ப தோஷத்திற்கு சில பரிகாரங்கள் மாறுபட்ட வகையில் கூறப்பட்டுள்ளது. தன்னை விட கீழ் உள்ள வரனை திருமணம் செய்வது. அதாவது ஒரு ஜாதியில் எடுத்துக் கொண்டால் பல பிரிவுகள் இருக்கும். அதில் ஒன்று உயர்ந்தது, மற்றொன்று தாழ்ந்தது என்று அப்பிரிவினர் கூறுவர். அதில் உயர்ந்த பிரிவில் உள்ளவர் தாழ்ந்த பிரிவைச் சேர்ந்த பெண்ணை மணப்பதும் மாங்கல்ய/சர்ப்ப தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெண்ணையும் மணக்கலாம். |