|
அருள்மிகு சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயில்
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, சித்திரை நட்சத்திர நாளிலோ அவசியம் சென்று வழிபட வேண்டி கோயில் மதுரை சோழவந்தான் அருகே உள்ள குருவித்துறை சித்திரரத வல்லபபெருமாள் திருக்கோயிலாகும்.
தல வரலாறு: முன்னொரு காலத்தில் நடந்த தேவ, அசுர போரில், அசுரர்களில் நிறைய பேர் மாண்டனர். மாண்ட அசுரர்களை அசுர குரு சுக்கிராச்சாரியார் மருதசஞ் சீவினி என்ற மந்திரம் மூலம் உயிர் பெறச்செய்தார். அந்த மந்திரத்தை கற்றுக் கொள்ள விரும்பிய தேவர்கள், வியாழ பகவானின் (குரு) மகன் கசனை , அசுர குருவிடம் சென்று மருதசஞ்சீவினி மந்திரத்தை உபதேசம் பெற்று வா என்றார்கள். கசனும் தன் தந்தை வியாழபகவான் ஆசியுடன் அசுரலோகம் சென்று , சுக்ராச்சாரியாரின் மகள் தேவயானி மூலமாக சுக்ராச்சாரியாரிடம் மந்திரம் கற்றுக் கொண்டான். இதைக்கண்ட அசுரர்கள் கசன் உயிரோடு இருந்தால் அசுரர்குலத்திற்கு ஆபத்து வந்துவிடும் என நினைத்து , கசனை கொன்று தீயிலிட்டு சாம்பலாக்கி அசுரகுரு குடிக்கும் பானத்தில் கலக்கி கொடுத்து விட்டார்கள். அவரும் குடித்து விட்டார். கசனை காணாத தேவயாணி, தன் தந்தையிடம்,கசனின் இருப்பிடத்தை கண்டறியும் படி வேண்டினாள். அசுரகுரு தன் ஞான திருஷ்டியால் கசன் தன் வயிற்றில் இருப்பதை அறிந்து, மருதசஞ்சீவினி மந்திரம் மூலம் கசனை உயிர் பெறச் செய்தார். உயிர்பெற்று வந்த கசன், தன் உயிரைக்காப்பாற்றிய அசுரகுரு இறந்து கிடப்பதைக் கண்டு தான் அவரிடம் கற்ற மந்திரம் மூலம் அசுரகுருவை உயிர்பெறச் செய்தான்.சுக்கிராச்சாரியார் தன் மகள் தேவயாணியை மணம் முடித்து செல்ல வேண்டும் என்று கூற, அதற்கு கசன் சுக்கிராச்சாரியாரின் வயிற்றிலிருந்து மீண்டு வந்துள்ளதால் தேவயாணி எனக்கு சகோதரி முறை வேண்டும் என பக்குவமாகக் கூறி தேவலோகம் கிளம்பினான். கடும்கோபம் கொண்ட அவள், கசனை சப்த மலைகளாலும் தடுத்து நிறுத்தி அசுரலோகத்திலேயே தங்க வைத்தாள். கசனைக் காணாத வியாழன், மகனை மீட்டுத்தரும்படி இத்தலத்து பெருமாளை வேண்டி தவமிருந்தார். பெருமாள், சககரத் தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டார். பின்பு வியாழனின் வேண்டுதலுக்காக இங்கேயே எழுந்தருளினார்.
சித்திரை நட்சத்திர தலம்: பெருமாள், குரு பகவானுக்கு ஒரு சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரத்தன்று (சித்ரா பவுர்ணமி), சித்திரத் தேரில் எழுந்தருளி காட்சி தந்தார். இதனால் இவர், சித்திரரத வல்லபபெருமாள் என்று அழைக்கப்படுகிறார். எனவே தான் இத்தலம் சித்திரை நட்சத்திரத்திற்குரிய கோயிலாக விளங்குகிறது. இத்தல பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சந்தன மரச்சிலையால் ஆன மூர்த்தியாக காட்சி தருவது விசேஷமான அம்சம். கோயிலுக்கு எதிரே குருபகவான், கரத்தாழ் வாருடன் சுயம்பு வடிவில் இருக்கிறார். குருபார்க்க கோடி நன்மை என்பதால், சித்திரை நட்சத்திரகாரர்களை தவிர மற்ற நட்சத்திரக்காரர்களும் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் ஜாதகத்தை ஏந்தியபடி இந்த பெருமாளை சுற்றி வருவது சிறப்பு.
இருப்பிடம் : மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் குருவித்துறைக்கு மதுரை மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்து நிறைய பஸ் வசதிகள் உள்ளன.அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. வியாழன், பவுர்ணமி போன்ற விசேஷ நாட்களில் கோயில் வரை செல்ல பஸ் உள்ளது.
திறக்கும் நேரம்: காலை 7.30 - மதியம் 12 மணி, மாலை 3 - 6 மணி . விழாக்காலங்களில் பூஜை நேரம் மாறுபடும்.
போன்: 94439 61948, 97902 95795
|