|
அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், தங்கள் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ அவசியம் செல்ல வேண்டிய தலம் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் கோயிலாகும்.
தல வரலாறு : ஒரு முறை சோழ மன்னனாகிய கல்மாஷபாதன் என்பவனுக்கு நீண்ட காலமாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. சிறந்த சிவபக்தனான இவன், தனக்கு பின் சிவ சேவை செய்ய ஆளில்லை என்பதை நினைத்து வருந்தி, அகத்திய முனிவரிடம் முறையிட்டான். மன்னனின் குறைநீங்க திருவரங்குளம் சென்று சிவனை வணங்கும்படி அகத்தியர் கூறினார். மன்னனும் இத்தலம் வந்து சிவலிங்கத்தை தேடி அலைந்தான். அத்துடன் அங்கேயே தங்கி சிவன் கோயிலை கட்ட முடிவெடுத்தான். அப்போது சிவன், அப்பகுதியில் தான் இருக்கும் இடத்தை அரசனுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார். இடையர்கள் கொண்டுவரும் பூஜைப்பொருள்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தினமும் கீழே இடறி விழுவதை அறிந்த மன்னன், அந்த இடத்திற்கு சென்று தன் வாளால் பூமியில் கீறிப்பார்த்தான்.
அப்போது பூமியிலிருந்த சிவலிங்கத்தின் தலையில் வாள்பட்டு ரத்தம் பீய்ச்சியடித்தது. இதைக்கண்டு பயந்த மன்னன், மாபெரும் தவறு செய்து விட்டேன் என புலம்பி தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றான். இறைவன் மன்னனை தடுத்தாட்கொண்டு பார்வதியுடன் திருமணக்கோலத்தில் தரிசனம் கொடுத்து, இந்த இடத்தில் தனக்கு கோயில் கட்டும் படி ஆணையிட்டார். ஒரு பூர நட்சத்திர நாளில் தான் இந்த நிகழ்ச்சி நடந்தது.இறைவனின் அருளால் மன்னன் கோயில் கட்டினான். அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பூர நட்சத்திரத்தலம்: பூர தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள ஒரு புனித தீர்த்தமாகும். அம்மன் சிவனது தரிசனங்கள் அனைத்தையும் பெற பூராக்னியில் தவம் செய்தாள். இவளது தவத்தில் மகிழந்த இறைவன் இத்தலத்தில் ஆடிப்பூர நன்னாளில் சிவ தரிசனம் தந்தார். மேலும் பூர நட்சத்திர லோகத்தில் சிவ தீர்த்தம், நாக தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஸ்ரீ தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், குரு தீர்த்தம் என ஏழு தீர்த்தங்கள் உண்டு. இதே ஏழு தீர்த்தங்கள் இத்தலத்திலும் இருப்பதால் இத்தலம் பூரம் நட்சத்திரத்திற்குரிய கோயிலானது. எனவே தான் பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது பிறந்த நட்சத்திர நாள், பிறந்தநாள், மாதாந்திர நட்சத்திர நாள், திருமணநாள், ஆடிப்பூரம் ஆகிய முக்கிய நாட்களிலும், அடிக்கடி யும் சென்று வழிபாடு செய்ய வேண்டிய முக்கியதலமானது.
முக்காடு போட்டு வழிபாடு: அம்மன் பெரியநாயகி நான்கு திருக்கரத்துடன் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள்.இப்பகுதியில் வாழ்ந்த கட்டுடையான் செட்டியார் வம்சத்தில் இத்தல அம்மன் பெண்குழந்தையாக பிறந்து வளர்ந்ததாக கூறப்படுகிறது. எனவே இப்போதும் கூட இந்த வம்சத்து பெண்கள் இக்கோயிலுக்கு வந்தால், தங்கள் வம்ச பெண்ணின் மாப்பிள்ளையாக சிவனை நினைத்து முக்காடு போட்டு வழிபாடு செய்யும் பழக்கம் உள்ளது.
கோயில் வெளிப்பிரகாரத்தில் பொற்பனை மரம் இருந்துள்ளது. இதிலிருந்து கிடைக்கும் பொன் பழங்கள் மூலம் பணம் பெற்று இந்த கோயிலை கட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அந்த இடத்தில் அதன் அடையாளமாக கல்ஸ்தூபி உள்ளது.
இருப்பிடம் : புதுக்கோட்டையிலிருந்து (7 கி.மீ.) பட்டுக்கோட்டை செல்லும் வழியில் திருவரங்குளம் உள்ளது.
திறக்கும் நேரம் : காலை 7 - 12 மணி, மாலை 5 - 7.30 மணி
போன் : 98651 56430,99652 11768
|