|
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயில்
மிருகசீரிஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, பிறந்த நட்சத்திர நாளிலோ சென்று வழிபாடு செய்ய வேண்டிய தலம் திருவாரூர் மாவட்டம் எண்கண் ஆதிநாராயணப்பெருமாள் திருக்கோயிலாகும்.
தல வரலாறு : ஒரு முறை பிருகு முனிவர் சமீவனம்(வன்னிமரக்காடு) என அழைக்கப்பட்ட இத்தலத்தில் பெருமாளை குறித்து தவம் இருந்தார். அப்போது சோழ அரசர் ஒருவர் தன் படைகளுடன் மிருகம் போல் முரட்டுத்தனமாக பெரும் குரல் எழுப்பியபடி சிங்கத்தை வேட்டையாட வந்தார். இவர்கள் வந்த சத்தத்தினால் முனிவரின் தவம் கலைந்தது. கோபமடைந்த முனிவர்,அரசனை நோக்கி,முனிவர்கள் தவம் செய்யும் இந்த வனத்தில் சிங்கத்தை வேட்டையாட வந்து, மாபெரும் தவறு செய்துவிட்டாய். எனவே நீ சிங்க முகத்துடன் அலைவாய்,என சாபமிட்டார். இதனால் வருந்திய மன்னன், முனிவரை வணங்கி தனக்கு சாப விமோசனம் தரும்படி மன்றாடினார். மனமிறங்கிய முனிவர், ஒரு தைப்பூசத்திருநாளில், விருத்த காவிரி எனப்படும் வெற்றாற்றில் நீராடி, இத்தல பெருமாளை வழிபாடு செய்து வரும்படி கூறினார். அரசனும் அதன்படி பெருமாளை மனமுருகி வழிபாடு செய்து வந்தான். இவனது வழிபாட்டில் மகிழந்த பெருமாள் கருட வாகனத்திலும், முருகப்பெருமான் மயில் வாகனத்திலும் இத்தலவன்னிமரத்தடியில் தோன்றி அரசனுக்கும், பிருகு முனிவருக்கும் அருள்புரிந்தனர். பெருமாளின் அருளால் அரசனுக்கு மிருக முகம் நீங்கி, பழைய முகத்தினை பெற்றான். அது முதல் இத்தலம் மிருக சீரிட நட்சத்திரத்திற்குரிய கோயிலாக போற்றப்படுகிறது.
நித்ய கருட சேவை : பொதுவாக பெருமாள் கோயில்களில், பெருமாள் நின்ற, இருந்த, கிடந்த கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது எதிரிலோ, அருகிலோ கருடாழ்வார் இருப்பார். திருவிழாக்காலங்களில் பெருமாள் கருடன் மீது எழுந்தருளி கருட சேவை சாதிப்பபார். ஆனால் இத்தலத்தில் பெருமாள் அரசனுக்கு உடனடியாக அருள்பாலிப்பதற்காக கருடவாகனத்தில் வந்ததால், மூலஸ்தானத்திலும் கருட வாகனத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். எனவே பெருமாளுக்கு இத்தலத்தில் நித்ய கருட சேவைசாதிக்கப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது அரிது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தலம்: மிருகண்டு மகரிஷி இத்தல பெருமாளை தினமும் அரூப வடிவில் வழிபடுவாதக கூறப்படுகிறது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது மிருகசீரிட நட்சத்திரத்தன்றோ இத்தல பெருமாளை வழிபாடு செய்தால், உடனே கருட வாகனத்தில் தோன்றி நம்மை காப்பார் என்பது ஐதீகம்..
பரிகாரத்தலம் : உற்சவர் ஆதிநாராயணப்பெருமாள் பிரயோகச்கரம் ஏந்தி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள், நாக தோஷம், பட்சி தோஷம் உள்ளவர்கள் , தோல் நோயால் பாதிக்கப்பட்வர்கள், பகைவர்களால் பாதிக்கப்பட்டவர்கள், பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர நினைப்பவர்கள், அடிக்கடி மரண சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்க்ப்பட்டவர்கள், குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் தொந்தரவுகள், பவுர்ணமி மற்றும் மிருகசீரிட நாட்களில் இங்கு வழிபாடு செய்கிறார்கள்.படிப்புக்கேற்ற வேலை கிடைக்காதவர்கள், நல்ல சம்பளத்துடன் கூடிய உயர்பதவி வேண்டுபவர்கள், புதன், சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
இருப்பிடம் : திருவாரூரிலிருந்து (13 கி.மீ) தஞ்சாவூர் செல்லும் வழியில் முகூந்தனூர் ஸ்டாப்பில் இறங்கி வலது பக்கம் ஒரு கி.மீ. தூரம் சென்றால் கோயிலை அடையலாம்.
திறக்கும் நேரம் : மாலை 5 - இரவு 7 மணி.
போன் : 04366-269 965, 94433 51528
|